![]() |
||||||||||
| ||||||||||
![]() ![]() கதிர்காம பாதயாத்திரை குழுவினர் காரைதீவை சென்றடைந்தனர்
தொண்டமானாறு செல்வச்சந்திதி ஆலயத்திலிருந்து கடந்த மே 10ஆம் திகதி ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதயாத்திரைக்குழுவினர் காரைதீவை சென்றடைந்தனர். வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரைக்கு தலைமைதாங்கி நடாத்திவரும் காரைதீவு ஸ்ரீநந்தவனப் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா ச.மகேஸ்வரன் (வேல்சாமி) இம்முறை 15வது தடவையாக பாதயாத்திரை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாதயாத்திரைக்குழுத்தலைவர் வேல்சாமியிடம் திகதி மாற்றம் பற்றிகேட்டபோது: கடந்த தடவையும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது. அப்போது பாதயாத்திரைக்குழு முல்லைத்தீவில் தரித்திருந்தவேளையில் இம்மாற்றச்செய்தி கிடைத்தது. ஆனால் இம்முறை ஆரம்பமாகமுதலே மாற்றச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம் ஜூலை மாதம் 29ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பின்பு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே சசீந்திர ராஜபக்ஸ விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் ஆடிவேல்விழா உற்சவம் ஜூன் மாதம் 28ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 13ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது என கூறியிருந்தார். இது எமக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது இதனால் நாம் மே 29இல் ஆரம்பிக்க திட்டமிருந்த பாதயாத்திரையை முன்கூட்டியே நடாத்தவேண்டிய அவசரநிலைமைக்குத் தள்ளப்பட்டோம். அதன்படி பாதயாத்திரை கடந்த மே 10ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது. ஒரு மாத காலத்தின்பின்னர் முருகன் அருளால் காரைதீவை வந்தடைந்தோம்.; அங்கிருந்து 12ம் திகதி புறப்பட்டு; 16ம் திகதி பாணமையையும் 18ம் திகதி உகந்தையையும் அடைவோம் என எதிர்பர்hக்கிறோம். மேலும் கடந்துவந்த பயணம் பற்றிக்கேட்டபோது பயணம் சுகமாகவிருந்தது. போகுமிடமெல்லாம் முருகனருளால் நல்லவரவேற்பு. என்றார். கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து பல குழுக்கள் வருடாந்தம் மேற்கொண்டுவருகின்றபோதிலும் யாழ்ப்பாணத்திலிருந்து கூடிய காலத்தில் சமய ஆசாரப்படி முறைப்படி பாதயாத்திரையை பக்திமுக்தியுடன் மேற்கொண்டுவருவது வேல்சாமி தலைமையிலான குழுவினர் என்றால் அனைவரும் அறிவர். 1999 களில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக் ஹரிகனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாதயாத்திரை இம்முறை 15வது தடவையாக நடைபெறவுள்ளது. 1999 இலிருந்து தொடர்ந்து 09வருடங்கள் தலைமை தாங்கி நடாத்திவந்த பற்றிக் ஹரிகன் 2007 இல் தமது தலைமைப்பொறுப்பை காரைதீவைச்சேர்ந்த வேல்சாமியிடம் ஒப்படைத்தார். அன்றிலிருந்து இன்றுவரை வேல்சாமி தலைமையில் இவ்யாத்திரை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. யுத்தம் முடிந்து சமாதானம் தோற்றுவிக்கப்பட்ட பிற்பாடு யாழ்ப்பாணத்திலிருந்து 3ஆவது தடவையாக இம்முறை இப்பாதயாத்திரை மேற்கொள்ளப்பட முருகன் அருள் பாலித்துள்ளான் என ஏற்பாட்டாளர் வேல்சாமி தெரிவித்தார். Courtesy: Thinakkathir of June 14, 2014
|